

ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில் உருவாகியுள்ள Immortal திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மரியப்பன் சின்னா இயக்கியுள்ள இப்படம், ஒரு மர்மமான உயிரினத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட வித்தியாசமான மிஸ்டரி த்ரில்லர் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பழங்குடியின தம்பதிக்கு குழந்தை பிறக்க இருக்கும் நிலையில், அவர்களுக்கு எதிர்பாராத விதமாக ஒரு மர்மமான உயிரினம் பிறக்கிறது. அந்த உயிரினத்திற்கும் இன்றைய காலகட்டத்திற்கும் என்ன தொடர்பு என்பதே கதையின் ஆரம்பக் கேள்வியாக அமைகிறது. பின்னர் கதை நிகழ்காலத்திற்கு நகர்கிறது. குறைந்த விலையில் தங்குவதற்கு இடம் தேடும் இளைஞராக ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்துள்ளார். அவரது தேடல் கயாடு லோஹர் வசிக்கும் ஆடம்பரமான குடியிருப்பிற்கு அழைத்துச் செல்கிறது. அதன் பின்னர் இருவரும் ஒரே வீட்டில் வசிக்கும் சூழல் உருவாகிறது. ஆரம்பத்தில் இது ஒரு காதல் கதையாக நகர்ந்தாலும், படிப்படியாக ஏதோ சரியாக இல்லை என்ற உணர்வு ஏற்படுகிறது. இடைவேளையில் வரும் திருப்பம் கதையின் போக்கையே மாற்றி, இரண்டாம் பாதைக்கான எதிர்பார்ப்பை உருவாக்குகிறது.
இரண்டாம் பாதையில் படம் முழுமையாக மர்மம் மற்றும் சர்வைவல் த்ரில்லர் களத்திற்குள் செல்கிறது. கயாடு லோஹரைச் சுற்றி இருக்கும் விசித்திரமான உலகிலிருந்து தப்பிக்க ஜி.வி. பிரகாஷ் மேற்கொள்ளும் முயற்சியே கதையின் முக்கிய அம்சமாகிறது. கயாடுவின் கதாபாத்திரத்திற்குப் பின்னால் இருக்கும் ரகசியமும், அந்த மர்ம உயிரினத்துடனான தொடர்பும் படிப்படியாக வெளிப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு அடுக்காக மர்மங்கள் அவிழும்போது, படத்தின் மீதான ஆர்வமும் அதிகரிக்கிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் சர்வைவல் அம்சங்கள் கதையை சுவாரஸ்யமாக நகர்த்துகின்றன.
ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒருவராகத் திகழ்கிறார். எளிதில் பார்வையாளர்களுடன் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய ‘நம்ம பக்கத்து வீட்டு பையன்’ போன்ற தோற்றமும் இயல்பான நடிப்பும் அவரது கதாபாத்திரத்திற்கு நம்பகத்தன்மையை அளிக்கின்றன. ஆரம்பக் காட்சிகளில் அவர் எதிர்கொள்ளும் விசித்திரமான சம்பவங்களைப் புரிந்துகொள்ள முடியாமல் குழம்பும் விதமும் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. பின்னர் கயாடு கதாபாத்திரத்தின் மீது அவர் வெளிப்படுத்தும் பயம் மற்றும் பதற்றம், அவரது நடிப்பிற்கு மற்றொரு பரிமாணத்தை சேர்க்கிறது.
கயாடு லோஹர் ஆரம்பத்தில் மென்மையான மற்றும் வசீகரமான கதாபாத்திரமாக அறிமுகமாகிறார். ஆனால் கதை முன்னேறும்போது அவரது கதாபாத்திரத்தின் மற்றொரு முகம் வெளிப்படுகிறது. குறிப்பாக ‘Beauty in the Beast’ என்ற கருத்தை மையமாகக் கொண்ட அவரது கதாபாத்திர வடிவமைப்பு வித்தியாசமாக உள்ளது. வழக்கமான கதாநாயகி பாத்திரத்திலிருந்து மாறுபட்ட ஒரு சவாலான கதாபாத்திரத்தை கயாடு சிறப்பாக கையாண்டுள்ளார். மர்மம் அதிகரிக்க அதிகரிக்க அவரது கதாபாத்திரமும் படத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டுகிறது.
டி.எம். கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர் உள்ளிட்ட துணை நடிகர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாக கையாண்டுள்ளனர். குறிப்பாக கயாடு கதாபாத்திரத்துடன் தொடர்புடைய ஒரு பாதிக்கப்பட்ட நபராக வரும் டி.எம். கார்த்திக் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறார். அவரது கதாபாத்திரம் கயாடுவைச் சுற்றியுள்ள மர்மத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது. அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்தின் மனநிலைக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. மர்மமும் அமானுஷ்யத் தன்மையும் கலந்த சூழலை உருவாக்குவதில் காட்சியமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.
சாம் சி.எஸ். இசையும் பின்னணி இசையும் படத்தின் முக்கியமான காட்சிகளுக்கு தேவையான பதற்றத்தை உருவாக்குகின்றன. குறிப்பாக மர்மமான மற்றும் உயிரினம் தொடர்பான காட்சிகளில் பின்னணி இசை படத்தின் தாக்கத்தை அதிகரிக்கிறது. உயிரினம் தொடர்பான காட்சிகளில் பணியாற்றியுள்ள TOW VFX (The Ordinary Works) குழுவின் பணி பாராட்டுக்குரியது. VFX, சவுண்ட் டிசைன் மற்றும் மிக்ஸிங் ஆகியவை இணைந்து அந்தக் காட்சிகளுக்கு தேவையான அச்சத்தையும் மர்ம உணர்வையும் உருவாக்குகின்றன. கத்தம் சிவாவின் சவுண்ட் டிசைன் மற்றும் மிக்ஸிங்கும் படத்தின் ஒட்டுமொத்த அனுபவத்திற்கு கூடுதல் வலு சேர்க்கின்றன.
ராஜேஷ் எம். மேற்கொண்டுள்ள எடிட்டிங் படத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. 131 நிமிடங்கள் மட்டுமே கொண்டிருக்கும் படத்தின் ரன்னிங் டைம், கதையை தேவையில்லாமல் நீட்டிக்காமல் விறுவிறுப்பாக நகர்த்த உதவுகிறது. குறிப்பாக மிஸ்டரி மற்றும் சர்வைவல் த்ரில்லர் போன்ற வகை திரைப்படங்களுக்கு தேவையான வேகத்தை எடிட்டிங் தக்க வைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் வழக்கமாக அதிகம் முயற்சிக்கப்படாத ஒரு கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்ததற்காக இயக்குநர் மரியப்பன் சின்னாவை பாராட்டலாம். மர்மம், வித்தியாசமான உயிரினம் மற்றும் சர்வைவல் த்ரில்லர் அம்சங்களை ஒன்றாக இணைத்து புதிய அனுபவத்தை உருவாக்க அவர் முயற்சித்துள்ளார். இந்த வகை திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்காக பல சுவாரஸ்யமான தருணங்களையும் உருவாக்கியுள்ளார். அதே நேரத்தில், படத்தின் மையக் கருத்தை திரைக்கதை இன்னும் ஆழமாக ஆராய்ந்திருக்கலாம். கதையின் அடிப்படை யோசனை சுவாரஸ்யமாக இருந்தாலும், வலுவான திரைக்கதை அமைப்பு இருந்திருந்தால் அதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.
AK Film Factory நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகவும் இப்படம் அமைந்துள்ளது. அறிமுக தயாரிப்பு நிறுவனமாக இருந்தாலும், வழக்கமான கதையைத் தேர்ந்தெடுக்காமல் வித்தியாசமான மிஸ்டரி-த்ரில்லர் கதையை தயாரித்திருப்பது பாராட்டுக்குரியது. குறிப்பாக உயிரினத்தை மையமாகக் கொண்ட மர்மம் மற்றும் சர்வைவல் த்ரில்லர் வகை படங்கள் தமிழ் சினிமாவில் மிகவும் அரிதானவை என்பதால், இந்த முயற்சி கவனிக்கத்தக்கதாக உள்ளது.
மொத்தத்தில், Immortal ஒரு நேர்த்தியான மற்றும் விறுவிறுப்பான மிஸ்டரி-சர்வைவல் த்ரில்லராக அமைந்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹரின் நடிப்பு படத்தின் மிகப்பெரிய பலமாக உள்ளது. வித்தியாசமான கதாபாத்திரங்களையும் சூழலையும் இருவரும் தங்களது நடிப்பின் மூலம் பார்வையாளர்களுடன் இணைக்கின்றனர். மர்மமான உயிரினம் படத்திற்கு தனித்துவமான அடையாளத்தை வழங்குகிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் மர்மத்தின் அடுக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிப்படும்போது படம் மேலும் சுவாரஸ்யமாகிறது. இறுதி வரை தொடர்ந்து வரும் திருப்பங்கள், மிஸ்டரி மற்றும் சர்வைவல் த்ரில்லர் ரசிகர்களுக்கு இப்படத்தை ஒரு சுவாரஸ்யமான திரையரங்க அனுபவமாக மாற்றுகின்றன.
Ratings – 3.9/5
