சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சியான் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘பவர்ஹவுஸ்’!

அட்டகாசமான வீடியோவுடன் தலைப்பை அறிவித்த படக்குழு  – கமர்ஷியல் ஆக்ஷன் விருந்துக்கு தயாராகும் படம்!
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ், சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தனது புதிய படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’ என தலைப்பிட்டுள்ளது. இதுவரை ‘சீயான் 63’ என்ற தற்காலிகப் பெயரில் குறிப்பிடப்பட்டு வந்த இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை, ரசிகர்களை கவரும் வகையிலான அட்டகாசமான வீடியோ மூலம் படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

சீயான் விக்ரமின் 63வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இதற்கு முன்பு விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணியில் வெளியான ‘இருமுகன்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், சுமார் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

‘பவர்ஹவுஸ்’ படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோ, ஒரு அழகான குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் வகையில் தொடங்குகிறது. கல்யாண ஆர்டர் ஒன்றுக்காக சமையல் நடைபெறும் அழகான வீட்டிற்குள் விக்ரம் நுழைவதில் இருந்து காட்சிகள் நகர்கின்றன. தொடர்ந்து அந்த வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தப்படுகின்றனர். சம்யுக்தா ஹெக்டே, வி.டி.வி. கணேஷ், ஊர்வசி உள்ளிட்ட கதாபாத்திரங்கள் இடம்பெறும் அந்தப் பகுதி, ஒரு அமைதியான, மகிழ்ச்சியான குடும்பத்தின் சூழலை அழகாக வெளிப்படுத்துகிறது.

ஆனால், வீடியோவின் அடுத்த நொடியிலேயே மொத்த சூழலும் தலைகீழாக மாறுகிறது. குடும்பப் பின்னணியில் இருந்து அதிரடியான ஆக்ஷன் உலகத்திற்குள் காட்சிகள் திடீரென பயணிக்கின்றன. விக்ரம் ஒரு பூட்டிய அறையைத் திறந்து உள்ளே செல்வதும், அங்கு அடிபட்டு கிடக்கும் அடியாட்களுடன் அவர் பேசும் காட்சிகளும் இடம்பெறுகின்றன. இதன் மூலம் ‘பவர்ஹவுஸ்’ என்ற தலைப்புக்கு ஏற்ற வகையில் விக்ரமின் கதாபாத்திரத்தின் மற்றொரு முகத்தை வெளிப்படுத்தும் விதமாக வீடியோ அமைந்துள்ளது. குடும்ப உணர்வுகளும் கமர்ஷியல் ஆக்ஷனும் இணைந்த இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

‘பவர்ஹவுஸ்’ அனைவரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஐடியாலஜி செண்டிமெண்ட் கலந்த  ஆக்ஷன்  திரைப்படமாக உருவாகி வருகிறது. விக்ரமின் வழக்கமான மாஸ் அம்சங்களுடன், குடும்ப பார்வையாளர்களைக் கவரும் உணர்வுப்பூர்வமான கதை, பரபரப்பான திரில்லர் திரைக்கதை மற்றும் அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் இணைந்த படமாக இது உருவாகி வருகிறது. இப்படத்தில் எம். எஸ். பாஸ்கர், ஊர்வசி, சம்யுக்தா ஹெக்டே, ரியா ஷிபு, வி.டி.வி. கணேஷ், சுபாஷ் செல்வம் மற்றும் விஷ்ணு ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். ஜி. சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணைத் தயாரிப்பாளர்களாக உள்ளனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக ஆர்.டி. ராஜசேகர் ISC, தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன், வசன எழுத்தாளராக ஷான் கருப்புசாமி, சண்டைக் காட்சிகள் இயக்குநராக ஸ்டண்ட் சில்வா, நடன அமைப்பாளராக பிருந்தா, படத்தொகுப்பாளராக ரேமண்ட் டெரிக் கிராஸ்டா, கலை இயக்குநராக சூர்யா ராஜீவன், ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி, விளம்பர வடிவமைப்பாளராக கோபி பிரசன்னா மற்றும் ஸ்டில்ஸ் புகைப்படக் கலைஞராக தேனி முருகன் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், சியான் விக்ரமின் அடுத்த படத்தின் தலைப்பு  அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, குடும்பப் பின்னணியில் தொடங்கி அதிரடியான ஆக்ஷன் காட்சிகளாக மாறும் வீடியோவும், ‘பவர்ஹவுஸ்’ என்ற தலைப்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.

A dark and atmospheric movie poster featuring a silhouette of a person holding a mop over a bucket with a red substance, accompanied by text announcing the title 'Power House' and details about the film.

Leave a Reply

error:

Discover more from view7media

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading