வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’ டிரெய்லர் – அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது!

இலங்கை மக்களின் வலி, வாழ்வியல் மற்றும் தாய்நிலத்தின் மீதான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தாய்நிலம்’ திரைப்படம் அக்டோபர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நெனி என்டர்டெயின்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜி. தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இலங்கையில் நடைபெற்ற போரின் பின்னணியில், 2016-ல் உறவுகளையும் சொந்த மண்ணையும் இழந்து, வேறு வழியின்றி தமிழ்நாட்டிற்கு வந்து சேரும் ஒரு தந்தையும் அவரது சிறுமகளும் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்டதாக ‘தாய்நிலம்’ உருவாகியுள்ளது. தாய்நிலத்தை விட்டு வெளியேறிய பிறகு புதிய இடத்தில் வாழ்க்கையை தொடங்க வேண்டிய சூழலில், அந்த தந்தையும் மகளும் சந்திக்கும் சவால்களையும், அவர்களைச் சுற்றியுள்ள மனிதர்களின் அன்பையும் திரைப்படம் பேசுகிறது.

A man with a beard sitting on a stone with a young girl, both smiling and engaged in a conversation, surrounded by lush green trees and a woven bamboo structure in the background.

எல்லாவற்றையும் இழந்து தமிழ்நாட்டிற்கு வரும் அந்த தந்தையின் மிகப்பெரிய ஆசை, தனது மகளை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான். அதற்காக அவர் எதிர்கொள்ளும் போராட்டங்கள், வாழ்க்கையில் கிடைக்கும் புதிய வாய்ப்புகள், அருகில் இருக்கும் நல்ல மனிதர்களின் உதவி என அவர்களின் பயணம் நகர்கிறது. தாய்நிலத்தில் கிடைக்காத சுதந்திரத்தையும் புதிய வாழ்க்கையில் அவர் சந்திக்கும் அனுபவங்களையும், அதே நேரத்தில் தாய்நிலத்தின் நினைவுகள் அவரை விட்டு ஒருபோதும் நீங்காததையும் அழுத்தமான உணர்வுகளுடன் பதிவு செய்யும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

இலங்கை மக்களின் வாழ்வில் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் வலிகள் குறித்து அதிகம் பேசப்படாத சில அம்சங்களையும் ‘தாய்நிலம்’ திரைப்படம் தனது கதையின் வழியாக முன்வைக்கிறது. குறிப்பாக, சொந்த மண்ணை இழந்து புதிய இடத்தில் வாழ்க்கையை கட்டமைக்க வேண்டிய மனிதர்களின் மனநிலை, அவர்களின் எதிர்பார்ப்புகள், உறவுகள் மற்றும் எதிர்கால கனவுகளை மையப்படுத்தி படம் உருவாகியிருப்பது டிரெய்லர் மூலம் தெரியவருகிறது.

டாக்டர் அமர் ராமச்சந்திரன், நேகா அமர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர், இவர்களுடன் பாலாசிங், தீபக் பிரபாகர், பத்மஜா, நிமிஷா நம்பியார், குரு தட்சணா, தளபதி ஆனந்த், சரவணன் சொக்கம்பட்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜி. தேவ் இயக்கியுள்ள இப்படத்தில், படத்தின் ஒளிப்பதிவை பிரசாந்த் பிரணவம், இசையை ஔசேப்பச்சன், படத்தொகுப்பை தீஜோ பி. வர்கீஸ், கலை இயக்கத்தை கைலாஸ் திரிப்பூனிதுறை, மிக்ஸிங் ராஜாகிருஷ்ணன், பின்னணி இசையை ஔசேப்பச்சன் ஆகியோர் கவனித்துள்ளனர். மேலும், பல்வேறு தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

திரையரங்க வெளியீட்டுக்கு முன்பாகவே ‘தாய்நிலம்’ சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கவனம் பெற்றுள்ளது. படத்தின் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலின்படி, Toronto Tamil Film Festival – Canada, Luleå International Film Festival – Sweden, Catharsis International Film Festival – Belgium ஆகிய திரைப்பட விழாக்களில் இப்படம் Official Selection ஆக இடம்பெற்றுள்ளது.

மேலும் Crown Wood International Film Festival-ல் Best Indian Film, Seventh Art Independent International Film Festival-ல் Best Original Score, Tamil Nadu International Film Festival-ல் Best Debut Filmmaker மற்றும் Best Narrative Feature Film – Special Mention, Cosmos International Film Festival-ல் Best Cameraman மற்றும் Best Debut Director உள்ளிட்ட அங்கீகாரங்களையும் இப்படம் பெற்றுள்ளது.

இந்நிலையில், நேற்று வெளியாகியுள்ள ‘தாய்நிலம்’ திரைப்படத்தின் டிரெய்லர், படத்தின் கதை களத்தையும் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் அழுத்தமாக வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது. சர்வதேச திரைப்பட விழாக்களில் கிடைத்த அங்கீகாரங்களுடன், தற்போது டிரெய்லர் ஏற்படுத்தியுள்ள வரவேற்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ‘தாய்நிலம்’ திரைப்படம் அக்டோபர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Leave a Reply

error:

Discover more from view7media

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading