
2008ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழீழப் போரின் பின்னணியில் உருவாகியுள்ள Motherland திரைப்படம், ஒரு தந்தையின் அன்பு, தியாகம் மற்றும் தனது மகளுக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்ற நம்பிக்கையை உணர்வுப்பூர்வமாகப் பேசுகிறது. போரில் தனது மனைவியை இழக்கும் அமர் ராமச்சந்திரன், தனது சிறிய மகள் தமிழினியின் பாதுகாப்பை நினைத்து எப்போதும் அச்சத்துடன் வாழ்கிறார். மகளையாவது பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில், அவளைத் தமிழ்நாட்டில் உள்ள உறவினர்களிடம் அனுப்ப முயற்சி செய்கிறார். ஆனால், எதிர்பாராத சூழ்நிலைகளால் அவரது முயற்சி கைகூடாமல் போகிறது. இதனால், தந்தையும் மகளும் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகிறது.
இத்தனை துயரங்களுக்கு மத்தியிலும், அவர்களுக்குக் கிடைக்கும் சிலரின் உதவியும் அன்பும் அமருக்கு புதிய நம்பிக்கையை அளிக்கின்றன. தன்னைச் சுற்றியுள்ள நல்ல உள்ளங்களால், தனது மகளுக்காவது நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை அவருக்குள் ஏற்படுகிறது. போர் சூழலில் வாழும் ஒரு தந்தையும் மகளும் சந்திக்கும் வலிகளையும், அவர்களுக்குள் இருக்கும் அன்பையும் மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. இந்த உணர்வுப்பூர்வமான பயணம் பார்வையாளர்களின் மனதைத் தொடும் வகையில் அமைந்துள்ளது.
அமர் ராமச்சந்திரன் தனது நடிப்பால் ஒரு தந்தையின் அன்பு, பயம், இயலாமை மற்றும் மனவேதனையை மிகவும் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, அவரது கண்கள் மற்றும் முகபாவனைகள் வழியாகவே பல உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் பாராட்டுக்குரியது. தமிழினியாக நடித்துள்ள நேஹா அமரும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். அதிகமான வசனங்கள் இல்லாமலேயே, ஒரு குழந்தையின் வெகுளித்தனம், பயம் மற்றும் மனக்குழப்பத்தைத் தனது நடிப்பின் மூலம் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். பாலா சிங் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களது இயல்பான நடிப்பால் கதைக்கு மேலும் வலு சேர்த்துள்ளனர்.
பிரசாந்த் பிரணவத்தின் ஒளிப்பதிவு, கதையின் சூழலையும் அதில் நிறைந்திருக்கும் உணர்வுகளையும் அழகாகப் பதிவு செய்துள்ளது. உசேப்பச்சனின் பின்னணி இசை, படத்தின் முக்கியமான உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு மேலும் வலு சேர்க்கிறது. டிஜோ பி. வர்கீஸின் அமைதியான, நிதானமான திரைக்கதை அணுகுமுறை கதையை அவசரமின்றி நகர்த்துவதுடன், அதன் உணர்வுப்பூர்வமான தாக்கத்தையும் தக்கவைத்துக் கொள்கிறது.
போரில் பெற்றோரை இழந்து, எதிர்காலம் குறித்த எந்தவித உறுதியும் இல்லாமல் தவிக்கும் குழந்தைகளின் நிலையை உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்துள்ள இயக்குநர் அபிலாஷ் ஜி. தேவன் பாராட்டுக்குரியவர். குறிப்பாக, படத்தின் கிளைமாக்ஸ் மனதைத் தொடும் வகையில் அமைந்து, படம் முடிந்த பிறகும் அதன் தாக்கத்தை நம்மிடம் விட்டுச் செல்கிறது.
மொத்தத்தில், Motherland ஒரு தந்தையின் பாசத்தையும், போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வலியையும் நம்பிக்கையையும் எடுத்துச் சொல்லும் நெகிழ்ச்சியான திரைப்படம். போர் முடிந்த பிறகும் அதன் பாதிப்புகள் குழந்தைகளின் வாழ்க்கையை எவ்வளவு கடுமையாகச் சிதைக்கக்கூடும் என்பதை இப்படம் உணர்த்துகிறது. அதே நேரத்தில், அன்பும் மனிதநேயமும் நம்பிக்கையும் இருந்தால், இருண்ட சூழலிலும் ஒரு நல்ல எதிர்காலத்திற்கான வழி பிறக்கும் என்பதையும் மனதில் பதிய வைக்கிறது.
Ratings – 3.7/5
