ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘தங்கப்புள்ள’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘தங்கப்புள்ள’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

ஜி.வி பிரகாஷ் குமார் வெளியிட்ட தகப்பன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘தங்கப்புள்ள’ பாடல்

மகனைப் பிரிந்து வாழும் தந்தையின் அன்பையும் ஏக்கத்தையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் பாடல்!

நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்திலிருந்து ‘தங்கப்புள்ள’ எனும் முதல் பாடலை (First Single) இசையமைப்பாளரும் நடிகருமான ஜி. வி பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார். மார்ஷல் ராபின்சன் இசையமைப்பில், பாடலாசிரியர் பா. விஜய் எழுதியுள்ள இப்பாடலை முருகவேல் பாடியுள்ளார். தந்தை – மகன் உறவின் ஆழத்தையும், பிரிவின் வலியையும், தந்தையின் அளவற்ற அன்பையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் இப்பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பொதுவாகத் தமிழ் சினிமாவில் அப்பா – மகன் அல்லது அப்பா – மகள் இருவரும் ஒன்றாக இருக்கும் தருணங்களையும், அவர்களுக்கிடையேயான பாசத்தையும் வெளிப்படுத்தும் பாடல்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன. ஆனால், மகனைப் பிரிந்து வாழும் தந்தை ஒருவர், தனது மகனின் வாழ்க்கையில் நிகழும் மகிழ்ச்சியான தருணங்களைத் தொலைவிலிருந்து யாருக்கும் தெரியாமல் ரசிக்கும் உணர்வுகளை  மையமாகக் கொண்டு ‘தங்கப்புள்ள’ பாடல் உருவாகியுள்ளது. மகனுடன் நேரடியாகத் தனது அன்பைப் பகிர்ந்துகொள்ள முடியாத ஒரு தந்தையின் ஏக்கத்தையும், மகனின் மகிழ்ச்சியை மறைந்திருந்து ரசிக்கும் பாசத்தையும் இப்பாடல் அழகாக வெளிப்படுத்துகிறது.

மென்மையான இசை, பா. விஜய்யின் உணர்வுப்பூர்வமான வரிகள், முருகவேலின் குரல் ஆகிய அனைத்தும் இணைந்து பாடலுக்கு உயிரூட்டியுள்ளன. தந்தையின் மனதில் புதைந்திருக்கும் அன்பையும், வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத உணர்வுகளையும் காட்சிகளுடன் இணைத்து வெளிப்படுத்தும் இப்பாடல், குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை மீண்டும் நினைவூட்டுகிறது. தற்போது வெளியாகியுள்ள ‘தங்கப்புள்ள’ பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

‘தெனாவட்டு’ படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் ஜீவா நடிக்கும் இப்படத்தில், ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். K. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் பெற்றுள்ளது. மேலும், படம் முடிவடைவதற்கு முன்பே படத்தின் சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமையை ZEE தமிழ் நிறுவனம் மற்றும் OTT உரிமையை Zee5 நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 24-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘தங்கப்புள்ள’ பாடலும் படத்திற்கு கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

Promotional poster for the Tamil movie 'Thangapulla', featuring a smiling family with a woman holding a plate of flowers, a young boy, and a man sitting on steps decorated with colorful festivities.

Leave a Reply

error: