‘கஸ்தூரி வீடு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

‘கஸ்தூரி வீடு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

A group of people standing together on a stage with a colorful backdrop, posing for a photo while holding a decorative model of a house.

ரென்டெக் ஃபிலிம் , லயன் வி ஃபிலிம்ஸ் , அன்னை சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்து வழங்க, விஜய் ஆர். ஆனந்த் இயக்கத்தில் சமுத்திரக்கனி,யோகி பாபு,தம்பி ராமையா,டேவிட் டிட்டோ,தனுஜா,ஸ்ரீ வர்ஷத் ஆனந்த், நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கஸ்தூரி வீடு’.இத்திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்றது.
படத்தில் ஒளிபரப்பப்பட்ட ட்ரெய்லர் ஆங்கிலப் படங்களுக்கு நிகராக இருந்ததாக விழாவில் கலந்து கொண்டவர்கள் பேசிக் கொண்டனர்.

இவ்விழாவில் தயாரிப்பாளர் லயன் டாக்டர் வகேஷ் வரவேற்புரையாற்றிப் பேசும் போது..,

“இந்த படம் ஆரம்பித்தது ஒரு பிசினஸ் மீட்டிங்கில் தான் அப்பொழுதுதான் இயக்குநரின் அறிமுகம் கிடைத்தது.

அரை மணி நேரத்தில் கதையை விளக்கினார். எவ்வளவோ படங்கள் பார்த்து இருக்கிறோம். எவ்வளவோ கதைகள் பார்த்திருக்கிறோம். ஆனால் இது புதிதாக இருந்தது. ஏதோ ஒன்று புதிதாக சுவாரஸ்யமாக இருப்பது தெரிந்தது.அரை மணி நேரத்தில் சொன்ன கதையில் எனக்கு நம்பிக்கை வந்து படத்தைத் தொடங்கலாம் என்று கூறிவிட்டேன்.அப்படித்தான் இந்தப் படம் தொடங்கப்பட்டது.

இயக்குநர் மிகவும் அர்ப்பணிப்பு உள்ள மனிதர்.படப்பிடிப்பில் அவரது கடின உழைப்பைப் பார்த்திருக்கிறேன் படப்பிடிப்புக்கு எப்போதாவது நான் சொல்லும் போது எல்லோரும் பரபரப்பாக இருப்பார்கள். அந்தந்த வேலை அப்படியே நடக்கட்டும் என்று நான் விட்டு விடுவேன்.இயக்குநர் மிகவும் அர்ப்பணிப்புள்ள மனிதர்,கடின உழைப்பாளி. அவரது உழைப்புக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்.

நான் பல தொழில்களில் ஈடுபட்டு வெற்றி பெற்று இருக்கிறேன். இப்போது சினிமாவுக்கு வந்திருக்கிறேன். இதிலும் வெற்றி பெறுவேன் என்று நம்புகிறேன் .அந்த அளவிற்கு படம் நம்பிக்கை தருவதாக இருக்கிறது. இங்கே வாழ்த்துவதற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி” என்றார்.

Two men shaking hands on stage at an event with a promotional background for a film. One man is wearing a black blazer and glasses, while the other is draped in a white shawl.

ரென்டெக் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் ராணி ஸ்ரீ ரெட்டி பேசும் போது..,

“நான் வெவ்வேறு பிசினஸில் நான் இருந்தேன். இப்போதுதான் திரைப்படத்துறைக்கு வந்திருக்கிறேன்.
சகோதரர் இயக்குநர் விஜய் ஆனந்த் என்னிடம் அரை மணி நேரத்தில் ஒரு கதை சொன்னார்.நானும் எனது கணவரும் கேட்டுக் கொண்டிருந்தோம். மறுநாள் மீண்டும் விரிவாகக் கதை சொன்னார். எந்தெந்த பாத்திரத்தில் யார் நடிப்பது என்பது வரை தெளிவாகக் கூறினார்.

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா என்றார்.பார்க்கலாம் என்று சொன்னேன் .அடுத்த பத்து நிமிடங்களில் வந்து அழைத்தார். பூஜை என்றார்கள்,வந்துவிட்டேன். அப்படி அன்று ஆரம்பித்தது தான் இன்று வரை வெற்றிகரமாகத் தொடர்கிறது.

எனது பிசினஸ் எல்லாம் வெற்றி பெறுவதற்கு எனது தாய் தந்தையின் ஆசீர்வாதம் பலமாக இருந்தது. அதேபோல எனது கணவரின் ஆதரவும் பக்கபலமாக இருந்தது. இன்று வரை அதுதான் தொடர்கிறது.இந்தப் படத்தின் வெற்றி ஊடகங்கள் கையில் தான் இருக்கிறது. நீங்கள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும். இந்தப் படக்குழுவினரை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஜி. கே. எம். தமிழ்க்குமரன் பேசும்போது..,

” சினிமா என்பது ஒரு கனவு உலகம். முதலில் படம் எடுக்கும் போது ஒரு கனவோடு வருவார்கள். இந்தத் தயாரிப்பாளர்கள் முதல் முறையாக இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.

படம் எடுக்கும் தயாரிப்பாளர், இயக்குநர் நடிப்பவர்கள் ,தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லாம் பெரிய கனவோடு வருவார்கள்,நானும் அப்படித்தான் ஒரு கனவோடு வந்தேன்.

படம் தயாரிப்பது மிகவும் கடினமான காரியம். சில தயாரிப்பாளர்களைப் பார்க்கும்போது அவர்கள் படும் சிரமங்களைப் பார்க்கும் போது பாவமாக இருக்கும்.சினிமா நல்ல தொழில் .ஆனால் அதைச்சரியாகச் செய்ய வேண்டும்.இன்று ‘மண்டாடி’ படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது. தயாரிப்பாளருக்குப் பெரிய லாபம் வந்துள்ளது.

இந்த ‘கஸ்தூரி வீடு’ ட்ரெய்லர் பார்த்தேன். நன்றாக உள்ளது. திரைப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லி விடைபெறுகிறேன். நன்றி” என்றார்

இயக்குநர் பவித்ரன் பேசும்போது..,

கமலா திரையரங்கில் நடக்கும் விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இதன் உரிமையாளர் சினிமாவை நேசித்தவர்.

அந்த அரங்கிலே நடைபெறும் இந்த விழாவில் பங்கு பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தின் இயக்குநர் விஜய் ஆனந்த் எனக்கு பல காலமாகத் தெரிந்தவர். அவர் கடினமான உழைப்பாளி. அவரது ட்ரெய்லரைப் பார்த்த போது நன்றாக இருக்கிறது. குடும்ப உறுப்பினர்களைக் கவரும்படியும் குழந்தைகளைக் கவரும்படியும் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார் என்பது வரும் காட்சிகளில் இருந்து தெரிகிறது.

வித்தியாசமான படத்தை கொடுத்திருக்கிறார்.வித்தியாசமான கலைஞர்கள் வரும்போது நீங்கள் ஆதரிக்க வேண்டும்; ஊக்கப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக அரசு சிறுபடத் தயாரிப்பாளர்களுக்கு பெரிய அளவில் மானியம் வழங்குவதற்கு சம்மதித்துள்ளது. இது சினிமா அரசு நிறைய செய்யும் என்று நம்புகிறோம். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குநர் ராஜகுமாரன் பேசும்போது..,

“இந்த கமலா திரையரங்கில் அடித்துப் பிடித்துக் கொண்டு படம் பார்த்தது முதல் பல்வேறு நினைவுகள் வருகின்றன .எங்கள் இயக்குநரின் பூவே உனக்காக படத்துக்காக 225 ஆவது நாள் கேடயம் வாங்கியது, சூரியவம்சம் படத்திற்காக 125 ஆவது நாள் கேடயம் வாங்கியது, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்திற்காக 250 ஆவது நாள் கேடயம் வாங்கியது போன்ற நினைவுகள் எனக்கு வருகின்றன.

இந்த ‘கஸ்தூரி வீடு’ படத்தை இயக்கியிருக்கும் விஜய் ஆனந்த் கடினமான உழைப்பாளி .விழாவுக்கு அழைப்புகளை ஒவ்வொரு வீட்டுக்கும் வந்து அழைத்தார். இந்த கஸ்தூரி வீடு படம் ஒரு கவனிக்கத்தக்க ஒரு படமாக இருக்கும் .அதில் எந்த சந்தேகமும் இல்லை.

இன்று திரையுலகில் அனைவருக்கும் பிடித்தவராக இருக்கிறார் சமுத்திரக்கனி. அவர் உள்ளங்கை நெல்லிக்கனி, திசையெங்கும் பறந்து வெற்றிக் கனி பறிக்கும் தங்கக் கனி .எளிய மனிதர், கடின உழைப்பு கொண்டவர். நண்பர்களுக்காக உதவியாக இருப்பவர். அவரும் இந்தப் படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இயக்குநர் பேரரசு பேசும் போது..,

“இந்த படத்தில் சமுத்திரக்கனி சார் நடித்திருக்கிறார் அவர் இன்று ஒரு பான் இந்தியா நடிகர்.ஆந்திரா சென்றாலும் கேரளா சென்றாலும் அவர் பேனர் போஸ்டரில் அவர் படம் இருக்கிறது.
அந்த அளவிற்கு அவர் பல மொழிகளில் நடித்து வருகிறார் .அப்படிப்பட்டவர் இது மாதிரி சிறிய படங்களுக்கு ஆதரவு கொடுத்து நடித்திருப்பது பாராட்டத்தக்கது.

வீடு என்றாலே பெண்கள் பெயர் தான் விளங்கும். இது ‘கஸ்தூரி வீடு’ .ஆண்கள் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் அவர்கள் பெயரை வீட்டுக்குச் சொல்ல மாட்டார்கள். பெண்கள் பெயரில் தான் இன்னார் வீடு என்று அழைப்பார்கள்.இப்போது ஆக்சன் படங்களுக்கும் பேய்ப்படங்களுக்கும் வித்தியாசமில்லை.

பேய்ப் படங்களில் வருகிற அறுக்கிறது, உடைப்பது, தலையை முறுக்குவது போன்ற காட்சிகள் எல்லாம் ஹீரோக்கள் நடிக்கும் ஆக்சன் படங்களில் வருகின்றன,பேய்ப் படத்திற்கும் ஆக்சன் படத்திற்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விட்டது.விஜய் ஆனந்தும் அப்படி ஒரு பேய்ப் படத்தை எடுத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் ஆன்மீகம்இருக்கிறது, பேய் இருக்கிறது, சென்டிமென்ட், அறிவியல் எல்லாமும் கலந்து இருக்கிறது.இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

படத்தின் இயக்குநர் விஜய் ஆர்.ஆனந்த் பேசும்போது..,

“நான் நிர்வாகத் தயாரிப்பாளராக இருந்திருக்கிறேன். ஒரிசாவுக்கு ஒரு முறை படப்பிடிப்புக்குச் சென்றபோது,

அந்த ஓட்டலில் தமிழ் சேனலே வரவில்லை. ஒரே ஒரு தமிழ் சேனல் மட்டும் வந்தது .அதை ஆன் செய்த போது சூப்பர் ஸ்டார் நடித்த ‘வெற்றி நிச்சயம் ,இதுவேத சத்தியம் ‘என்ற பாடல் ஒலித்தது .இடையில் ஒரு விளம்பரம் வந்தது.

அது ஒரு விழிப்புணர்வு விளம்பரம் .அதில் நன்றாக உடையணிந்து ஸ்டைலாக ஒரு நடிகர் -இயக்குநர் வந்தார். அவரை நிறைய படங்களில் பார்த்திருக்கிறோம். அவர்தான் சமுத்திரக்கனி அவர்கள். அவரை வைத்து ஏன் ஒரு கதை செய்யக்கூடாது என்று நினைத்தேன்.இந்தக்கதை தோன்றியது.
நாள் பூரி ஜெகநாதர் கோயிலில் இரண்டு விஷயங்கள் கிடைத்தன. ஒன்று : படத்தின் தலைப்பு கஸ்தூரி என்பது, அந்தப் பெயரில் திரைப்படமாக எடுப்பது, இன்னொன்று: ஹாரர் பேய்ப் படமாக எடுப்பது என்று, இப்படி இரண்டு விஷயங்கள் கிடைத்தன.

முதலில் 50 ஆயிரம் ரூபாய் வைத்து ஆரம்பிக்கப்பட்ட படம் தான் இந்த ‘கஸ்தூரி வீடு’.
இந்த படத்திற்கு சமுத்திரகனி சார் வந்த பிறகு , பெரியபடமாக மாறிவிட்டது. ஆரம்பத்தில் அவரை எப்படி அணுகுவது அவரிடம் எப்படி வேலை வாங்குவது என்று எனக்குப் பயமாக இருந்தது.தயக்கமாக இருந்ததது.ஆனால் அனைத்தையும் அவர் மாற்றி அற்புதமாக நடித்துக் கொடுத்தார்.

படத்தின் கதாநாயகன் பற்றி சொல்ல வேண்டும்,அவரைப் பார்த்தபோது ‘வருஷம் 16’கார்த்திக் தான் ஞாபகத்துக்கு வந்தார்.அவர் அற்புதமான திறமைசாலி. சொல்வதை எளிதாகப் புரிந்து கொண்டு சரியாக நடித்துக் கொடுப்பார்.

கதாநாயகி தனுஜா எனது நண்பரின் மகள். அவர் எனது குழந்தை போன்றவர் .காலம் கொண்டு வந்து சேர்த்திருக்கிற குழந்தை. நடிக்கும் போது அவருக்கு எனக்கும் நல்லிணக்கம் வந்து அற்புதமாக நடித்துக் கொடுத்தார். நிறைய சிரமமான காட்சிகளை நடித்துக் கொடுத்தார்.பயந்து அழும் காட்சிகளில் கிளிசரின் போடாமலேயே நடித்தார். எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

படம் ஆரம்பித்ததை விட முடித்தபோது பெரிதாகி செலவு நான்கு மடங்கு ஆகிவிட்டது . பலரும் இவ்வளவு செலவு தேவையா என்றார்கள்.ஆனால் படம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் செலவு செய்யத்தான் வேண்டும் என்று நான் கூறுவேன்.இந்தப் படத்திற்கு அனைவரும் ஆதரவு கொடுங்கள்.இந்த விழாவுக்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

படத்தில் நடித்த நடிகர் டேவிட் டிட்டோ பேசும்போது..,

A film promotional event with a male speaker at a podium, flanked by several attendees in the background. The backdrop features a spooky design related to the film.

“நான் இங்கே வந்திருப்பதற்கும் படத்தில் நடித்திருப்பதற்கும் ஒரே காரணம் இயக்குநர் தான். அவர் இல்லாமல் நான் இல்லை.அவருக்கு முதலில் என் நன்றி.இந்தப் படத்தில் நான் சிரமப்பட்டு நடித்ததாகக் கூறினார். ஆனால் இந்தப் படத்திற்காக இயக்குநர் பட்ட சிரமங்கள் ஏராளம். அதற்கு முன்பு இதெல்லாம் சாதாரணம்.

இந்தப் படத்திற்காக பேய் போல மேக்கப் போட்டு இருந்த பெண்ணைப் பார்த்து நான் பயந்து விட்டேன்,அந்த அளவுக்கு தத்ரூபமாக இருந்தது. ஒரு வீட்டில் படப்பிடிப்பிற்காகச் சென்றோம். அது நிஜமான பேய் வீடு என்று அவர் கூறிய போது எனக்கு இன்னும் பயமாக இருந்தது.படத்திற்கு அனைவரும் ஆதரவு கொடுங்கள்” என்றார்.

படத்தின் நாயகியாக நடித்திருக்கும் தனுஜா பேசும்போது..,

“ஒன்றரை ஆண்டுக்கு முன்பு இதே கமலா தியேட்டரில் என்னுடைய இன்னொரு படத்திற்காக வந்திருந்தேன்.அப்போது ஒரு பகுதியாக இருந்த எனது பாத்திரம் இப்போது முழுப் படத்திலும் வருவது போல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.இன்று மீண்டும் வந்திருக்கிறேன் காரணம் எனது அப்பா.
நான் நல்ல வேடங்களில் நடிப்பதற்குத் தயாராக இருக்கிறேன். வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். இதில் படம் முழுக்க நான் வருவது போல் கிடைத்திருக்கும் வாய்ப்புக்கு நன்றி.

எனக்கான கதாபாத்திரம் அமைந்திருப்பது மகிழ்ச்சி. சமுத்திரகனி சார் மரியாதைக்குரிய நபர்.அவருடன் நடித்ததில் மகிழ்ச்சி.படப்பிடிப்பு அனுபவம் மறக்க முடியாததாக இருந்தது. அனைவரும் இந்த படத்திற்கு ஆதரவு கொடுங்கள் “என்றார்

இயக்குநர் நடிகர் சமுத்திரக்கனி பேசும் போது..,

A group of people at a movie event, with a man speaking at a podium featuring the Kamala Cinemas logo and a promotional banner for a film in the background.

“இயக்குநர் நன்றி கூறிய அத்தனை பேருக்கும் நானும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் ,ஒரு நல்ல பயணம் இது.விஜய் ஆனந்தை சந்தித்து பேசும் போது சொன்ன விஷயங்கள் அவரோடு பயணப்பட்டது தயாரிப்பாளர் மேடம் அவர்களோடு பயணப்பட்டது எல்லாமே அற்புதமான விஷயம்.ஒவ்வொரு முறையும்ஒவ்வொரு புதுப் புது மனிதர்களோடு பயணம்செய்வது இறைவன் நமக்குக் கொடுத்த கொடை என்றுநினைக்கிறவன் நான்.

புதுப்புது மனிதர்களை பார்க்க வேண்டும். புது புது படைப்பாளிகளுடன் பயணம் செய்வது எனக்கு அவ்வளவு பிடிக்கும்.அப்படித்தான் இந்த படத்திற்கும் நிறைய பேர் உழைத்திருக்கிறார்கள். இந்த விழாவிற்கு நான் நேற்று இரவு படப்பிடிப்பு முடிந்து விமானம் பிடித்து வந்திருக்கிறேன்.இந்த மாதிரிப் படங்களுக்குத்தான் ஒரு முகம் வேண்டும். அப்படி எல்லோரும் விரும்புவார்கள். யாராவது ஒருவர் முன்னாடி வந்து நிற்க வேண்டும்.அப்படி ஒரு ஆசை இருக்கும்.நான் இப்போது ஒரு படம் எடுத்திருக்கிறேன். அதற்கு நான் இன்னொரு முகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.நான் யாரைத் தேடுகிறேனோ அவர் ஒரு படம்எடுத்தால் அவர் இன்னொரு முகத்தைத் தேடுவார்.
இப்படி மாறி மாறித் தேடிக்கொண்டே இருப்பது தான் நம் பயணமாகவே இருக்கும்.

இயக்குநர் விஜய்யிடம் ஒன்று சொல்வேன்.அதுதான் நிஜம் .நாம் சரியாக உழைத்தால் ஒரு மேஜிக் நடக்கும்.அந்த மேஜிக் உள்ளே நாமெல்லாம் இருப்போம். அதை மட்டும் நம்புவோம். யாரும் வந்து எந்தப் படத்தையும் தூக்கி எல்லாம் கொண்டு வந்து நிறுத்திட முடியாது. நம் வேலையை நாம்செய்வோம்; 100 சதவீதம் செய்வோம் .உண்மையாக உழைப்போம். மக்களுக்கு ஒரு நல்ல விஷயத்தைக் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

என் குருநாதர் சொல்வார் “நீ உண்மையா உழைச்சிட்டின்னா அது திரையில தெரியும். உன் உழைப்புதான் ஒரு பெரிய அரணா நிக்கும்”னு சொல்லுவாரு .அதற்கு ஒரு உதாரணம்தான் ‘மண்டாடி’ சூரியோட திரைப்படம்.அவருடைய உழைப்புதான்,அந்த இயக்குநரும்அதில் பங்கேற்ற தொழில்நுட்பக் கலைஞர்களுடைய உழைப்பும் , அந்த அசுர உழைப்புதான் அந்தப் படத்துக்கான ஒரு பெரிய முகமா வந்து நிற்கும். அப்படி நம்முடைய உழைப்பை 100% நாம் போட்டால் போதும்.

இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற இறைவனை நான் பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள்! தயாரிப்பாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் !இதில் பணிபுரிந்ததொழில்நுட்பக் கலைஞர்கள் நடிகர் நடிகையர்அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்,வெல்வோம்!என்றார்.

Leave a Reply

error:

Discover more from view7media

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading